Monday, January 6, 2014

SHBDO (2013) :

SHABDO (2013) :


வங்காளத்தின் மிகப்பழமையான பத்திரிக்கையான அமிர்த பஸார் பத்திரிக்காஇந்தப்படத்தை ஒரு அமைதிப்புரட்சிஎன்கிறது, டைம்ஸ் ஆஃப் இந்தியாவோ, ‘ஷப்தோவழக்கமான இந்திய, வங்காள சினிமாக்களிலிருந்து மிகவும் மாறுபட்ட ஒரு இந்திய சினிமாஎன்று பாராட்டி தலைவணங்குகிறது. உச்சகட்டமாக 60-வது இந்திய தேசியத்திரைப்பட விருதுகளில், சிறந்த படத்திற்கான விருதினையும் பெற்ற இந்தப்படம் எதைப்பற்றியது…?!

Obsession of profession அடிப்படையாக வைத்து வந்திருக்கும் படம்.
போதையில் தள்ளாடிக்கொண்டே மரப்படிகளில் ஏறி வருகிறான் அவன். மனைவியின் பெயரைச்சொல்லி கத்திக்கொண்டே கதவைத்தட்டுகிறான். கதவு திறக்காததால், கதவை மூர்க்கமாகத்திறந்து கொண்டு உள்ளே நுழைகிறான். உள்ளே, பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கும் மனைவியை இழுத்துத்தள்ள, அவள் கட்டிலில் விழுகிறாள். கட்டிலில் விழுபவள் முடியைப்பிடித்துத்தூக்கி எறிய ,அலமாரியில் இருக்கும் பொருட்களைத்தள்ளிவிட்டுக்கொண்டே அலமாரியில் சாய்கிறாள்.

இங்கே நிறுத்தப்படுகிறது ஸ்டூடியோவில் ஓடிக்கொண்டிருக்கும் அந்தப்படம்(!)

படத்தை நிறுத்திய ஒலிப்பதிவாளர், அருகிலிருக்கும் அந்தப்பெண்ணிடம் , something is missing, right…?! Tarak is missing
என்று சொல்லிவிட்டு, சில சுவிட்சுகளை இயக்கி, அதே வீடியோவை மீண்டும் play செய்கிறார்.  

இப்போது,

போதையில் தள்ளாடிக்கொண்டே , தம் தம் என காலடி அதிர மரப்படிகளில் ஏறி வருகிறான் அவன். மனைவியின் பெயரைச்சொல்லி கத்திக்கொண்டே கதவை டம் டம் எனத்தட்டுகிறான். கதவு திறக்காததால், கதவை மூர்க்கமாகத் தாழ்ப்பாள் அதிர படீரெனத்திறந்து கொண்டு உள்ளே நுழைகிறான். உள்ளே, பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கும் மனைவியை இழுத்துத்தள்ள, அவள் கட்டிலில் பொத்தென விழுகிறாள். கட்டிலில் விழுபவள் முடியைப்பிடித்துத்தூக்கி எறிய ,அலமாரியில் இருக்கும் பொருட்களை தடாலென தள்ளிவிட்டுக்கொண்டே அலமாரியில் சாய்கிறாள்.

மேற்கூறிய , தம், டம், படீர், பொத், தடால் ஒலிகளை ஸ்டூடியோவில் தாரக் செயற்கையாக உருவாக்குவது, அந்தக்காட்சியினூடே inter-cut’ல் காட்டப்படுகிறது.
(இதே முறைக்காட்சியமைப்புமொழிபடத்தில் பிண்ணனி இசையை விளக்கப்பயன்படுத்தப்பட்டிருப்பினும், இதே வீடியோ, படத்தில் வேறொரு இடத்திலும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.)

இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கும், திரைப்படங்களில் நம்மில் அதிகம் கவனிக்கப்படாத துறைகளுள் ஒன்றான ஒலி அமைப்பாளரைப் (foley artist) பற்றிய படமிது.

ஒரு professionல் , Obsessionக்கும், addictionக்கும் ஒரு நூலளவு வித்தியாசம்தான். அந்த நூலளவு வித்தியாசம் இடம் மாறும்போதுதான் பிரச்சனை தொடங்குகிறது.

முன்பே சொன்ன மாதிரி , தாரக், ஸ்டூடியோவில் படத்தின் பிண்ணனி ஒலிகளை (கவனிக்க. இசை அல்ல) உருவாக்கும் கலைஞன். அதாவது, திரையில் பார்க்கும் சூழ்நிலை சத்தங்களை திரைக்குப்பின் செயற்கையாக உருவாக்குபவன். பள்ளிப்பருவத்திலிருந்தே அவன் இந்த வேலையைச்செய்வதால், அவனுக்கு இந்தத்தொழிலின்மீது ஈடுபாடு என்பதையும் தாண்டி, அதனுடன் ஒரு பிடிப்பு. அந்தப்பிடிப்பே அவனுக்கு தொல்லையாக மாறுகிறது. எப்படியென்றால், சாதாரணமாக டீக்கடையில் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போதும் கூட, பேசுபவரைக்கவனிக்காமல், டீக்கடையில் டீ ஆற்றும் ஓசை, ஸ்டவ்வை பம்ப்பண்ணும் ஓசை என சுற்றுப்புற ஒலிகளில் மட்டுமே கவனம் கொள்கிறான். அதாவது மனிதப்பேச்சுகள் அவன் காதுகளை அடைவதில்லை (absence of mind). இதனால், புறஉலகை விட்டு, அவனுக்கேயான அந்த ஒலி உலகத்தில் சஞ்சரிக்கத்தொடங்குகிறான். இதனை குணப்படுத்த தாரக்கின் மனைவி, அவனை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச்செல்கிறாள்.
அந்த மனநல மருத்துவரும், இதே நிலை நீடித்தால், விரைவிலேயே தாரக்கினால் மனித பேச்சுகளைப்புரிந்து கொள்ளும் சக்தியை அவன் மூளை இழந்து விடும் என எச்சரிக்கிறாள். (அப்போதும் கூட, தாரக் அந்த மருத்துவரை சொல்வதை கவனிக்காமல் சுற்றுப்புற ஒலிகளில் கவனம் கொள்வது அருமையாகக் காட்டப்படுகிறது.) ஆனால் தாரக்கிடம் இருக்கும் பிரச்சனை, தனக்கு எந்தக்குறையும் இல்லை என அவன் நம்புவதால், சிகிச்சை இன்னும் சிக்கலாகிறது.
தாரக், தனது குறையை ஏற்றுக்கொண்டானா…?! குணமடைந்தானா என்பதே மீதிப்படம்.

இரண்டு வரிகளில் எழுதிவிடக்கூடிய கதை.

படம் முழுவதுமே தாரக்கின் குறையைப்பற்றிப்பேசுவதால், அதாவது, தாரக் எந்த அளவுக்கு ஒலிகளுக்கு அடிமையாகியிருக்கிறான் என்பதை விளக்குவதற்காக அமைக்கப்பட்ட காட்சிகளிலேயே முழுப்படமும் செல்வதால், படம் கொஞ்சம் மெதுவாக நகர்வது மாதிரியான உணர்வு. ஆனால் தெளிவான திரைக்கதையினால் முழுப்படமும் தொய்வில்லாமல் செல்கிறது. (ஆனால் க்ளைமேக்ஸில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்

படத்தை இயக்கி, அருமையான ஒரு டாக்டர் கேரக்டரிலும் நடித்திருக்கிறார் கௌஷிக் கங்கூலி. 

ஒலி அமைப்பைப்பற்றிய படம் என்பதால், ஒலி அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பிண்ணனி இசையே இல்லாமல், சுற்றுப்புற இசை மட்டுமே மிக நுணுக்கமாகப்பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்காகவே சிறந்த ஒலி அமைப்பிற்கான விருதையும் பெற்றது.
மொத்தத்தில் பார்க்க வேண்டிய ஒரு நல்ல படம் SHABDO….